கலைச்செல்வி
”ஏங்க.. கீழ வர்றீங்களா.. மணி பத்தாச்சு.. துாக்கம் சொக்குது..” என் மனைவியிடமிருந்து இது மூன்றாவது அழைப்பு. ஒரு வார காலமாக ஊர் பரபரத்துக் கிடந்ததில் யாருக்குமே நிம்மதியான துாக்கம் வாய்க்கவில்லை. பாப்பா துாளியில் துாங்கிக் கொண்டிருப்பாள். அவளை தனியே விட மனமில்லாமல் கீழிருந்தே அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள் என் மனைவி. சற்றே பெரிய வீடு. நானும் என் மனைவியும் என் சின்னஞ்சிறு மகளும்தான் மொத்த ஆட்களே. தரை முழுவதையும் கான்கீரீட் கட்டடத்துக்கு தாரை வார்க்காமல் தாத்தாவின் எண்ணப்படி தோட்டத்துக்கு மத்தியில்தான் வீட்டை அமைத்திருந்தார் அப்பா. தோட்டம் கூட வளர்ப்புத் தாவரங்களை விட தானாகவே மண்டி வளர்ந்த காட்டுத் தாவரங்களின் வனப்பில் வாசமும் நேசமும் காட்டிக் கொண்டிருந்தன. மொட்டை மாடியில் தவழ்ந்து கிடக்கும் வேப்பமரத்தின் காற்று உடலுக்குள் புகுந்து மனதையும் வருடிக் கொடுத்ததில் சொக்கிப் போய் படுத்திருந்தேன்.யாருமற்ற வெளியில் இயங்குவது கூட தனிச் சுகம்தான். கைகளிரண்டையும் பின்புறமாக கோர்த்து தலையணையாக்கி வானத்தை பார்த்து படுத்திருப்பது அதனை ஓரளவு சாத்தியப்படுத்தியிருந்தது. படர்ந்து கிடந்த வானவெளியில் சிதறியிருந்த நட்சத்திரங்கள் கண் சிமிட்டி சமிக்கைச் செய்ய மேகத்தினுள் ஒளிந்துக் கொண்டு ஜாலம் காட்டிய நிலவு மகிழ்ந்துப் போய் மதிமுகம் காட்டியதில் முழு வட்டம் பெற்றது. முழுமைப் பெற்ற இன்பத்தை நிலவு ஒளியாக்கிப் பரப்ப, பூமி விருப்பத்தோடு அதில் தன்னையும் இணைத்துக் கொண்டது. கண்களுக்கு நிறைவான நிலவொளி உலகியல் தொடர்புகளற்ற உறுத்தாத பயணத்தைச் சாத்தியப்படுத்தியதில் மனம் நிரம்பிக் கொண்டிருந்தது. என்னைக் கேட்டால் குற்றம் புரியும் மனப்போக்கு கொண்டவர்களை நிலவொளியில் நனைய வைத்தால் குற்றமற்ற சமுதாயத்தை வளர்த்தெடுக்கலாம் என்பேன். மனத்தின் வெளிகள் திறந்துக் கொள்வது வாழும் போதே நிறைந்துப் போவதையொத்தது.
காடுகள் கூட மனவெளிகளுக்குள் ஊடுருவக் கூடியவைதான். துாரத்துக் காடுகள் பயமூட்டுபவை. விஷப்பூச்சிகளையும் கொடும் மிருகங்களையும் தன்னுள்ளேக் கொண்டவை. மரங்களாலும் கனிமவளங்களாலும் ஆக்கப்பட்டவை. மழைகளாலும் சேறுகளாலும் நிரம்பியவை. ஆனால் அண்மைக்காடு அமைதியானது. ஆர்ப்பரிப்பற்றது. புதிர்களை உள்ளடக்கியிருப்பது. ஏகாந்தத்தின் எல்லை வரை பயணிக்கும் உரிமைப் பெற்றது. விசித்திரங்களை.. வீரியங்களை தனக்குள் புதைத்து.. அவிழ்க்க முற்படுவோர்க்கு அகப்படமால் சுரந்துக் கொண்டே போவது.
இது தாத்தாவுக்கு மட்டுமல்ல.. இங்குள்ள யாருக்குமே பூர்வீக பூமியல்ல. வந்தேறிக்குடிகளாக நிலைத்துப் போனவர்கள் சூழ்ந்த ஊர் இது. தாத்தா சிறுவயதில் தன் வீட்டாருடன் ஏற்பட்ட பிணக்கில் ஏதோ ஒரு நம்பிக்கையில் நண்பனின் வீட்டுக்கு வந்து விட, அந்நேரம் நண்பனின் வீட்டாருக்கு சம்பளம் உட்பட எதையும் எதிர்ப்பார்க்காத திடகாத்திரமான மனித உழைப்புத் தேவைப்பட தாத்தா இங்கேயே தங்கி விட்டார். காந்தி தாத்தா மாதிரி என் தாத்தாவுக்கும் மேல்சட்டை உடுத்திக் கொள்வதில் பிடித்தம் இருப்பதில்லை. விசேட நாட்களில் மட்டும் சட்டையும் மேல் துண்டுமாக காட்சியளிப்பார். “ஏன் தாத்தா சட்டைய கழட்டீட்ட.. ஒனக்கு குளுருல..“ என்பேன். ”எல்லாம் வீடுங்களாயிடுச்சு.. ஊருங்களாயிடுச்சு.. இன்னும் என்னய்யா குளுவுரு..” என்பார்.
தாத்தா யாரிடமும் சொல்லாத ரகசியங்களைக் கூட என்னிடம் சொல்லுவதுப் போல மிக மென்மையாகப் பேசுவார். காடு அவரைப் பதப்படுத்தி மிதப்படுத்தியதில் ஏற்பட்ட மென்மை என்று இப்போது தோன்றுகிறது. தாத்தாவைப் போன்ற ரசனையோ.. அல்லது மென்மையான சுபாவமோ ஏதோ ஒன்றினால் என்னை தாத்தாவோடு எப்போதும் ஒப்புமைப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். அப்பா சின்னப்பெட்டிக் கடையில் ஆரம்பித்து பிளாஸ்டிக் கடை வரை விரிவுப்படுத்தி ஒரே மகனான என்னிடம் தந்து விடும் போகும் போது ஐம்பதுகளின் இறுதியில்தானிருந்தார். அம்மாவுக்கு நான் மட்டுமே ஆதரவென்றிருந்தாலும் தாத்தாவுடன் நேரங்கழிப்பதே எனக்கு பிடித்தமானதாக இருக்கும். அவரின் இறுதிப்படுக்கை நாட்களில் கூட காடுக் குறித்த பழம்நினைவுகளிலேயே புத்துணர்வு பெறுபவராக இருந்தார். பேச்சு குறைந்து பிறகு நின்றே போனபோதும் நிறைவாகவே இறந்துப் போனார். என்னை திருமண பந்தந்துக்குள் நுழைத்த திருப்தியில் என் மகளைக் கூட பார்க்க சிந்தையற்று அம்மா செத்துப் போக நாங்கள் மூவராகிப் போனாலும் தாத்தா என்னுடன் நிலைத்துப் போனதில் தனிமை என்னுள் அதிகம் படராதிருந்தது.
சவரம் செய்யும் கண்ணாடி.. சோப்பு.. பல் துலக்கும் பிரஷ்.. துவைக்கும் கல்லில் கும்மிப் போடப்பட்ட என் மகளின் சிறு உடுப்புகள்.. கிளைகளுக்குள் பெருகிக் கிடக்கும் வேம்பின் இலைகள் என நிலவொளியில் எல்லாமே பார்வைக்கு தெளிவாக இருந்தன. நிலவை தன் உடலெங்கும் பூசிக்கொள்ளும் பௌர்ணமிக் காடுகள் கூட துல்லியமானதுதான். கழனிக்கு இடம் கொடுத்து காடு நகர்ந்து உள்வாங்கிக் கொண்டாலும் தாத்தா விடுவதாக இல்லை. பழையக் காதலியைத் தேடிப் போகும் முகபாவமிருக்கும் அவரிடம். முதன்முதலாக காடு அறிமுகமானபோது பயத்தில் தாத்தாவின் கையை இறுக்கிக் கொண்டே நடந்தேன். அறிமுகக்காடுகள் கால்களில் ஒட்டி இரத்தம் உறிஞ்சும் அட்டைகளைப் போல பயமுறுத்துபவையாக இருந்தன. சரசரப்பொலி பாம்புகளாகி அச்சமூட்டின. பறவைகள் சதா ஓலமிட்டு கொண்டேயிருந்தன. நாகரீகமற்ற விறகுவெட்டிகளும் தேனடை எடுப்போரும் ஒரு கையில் தலைகீழாக கருநாகமே தொங்கினாலும் மற்றொருக் கையால் பீடி வலிக்கும் அலட்சியவாதிகளாக இருந்தனர். ஏதோ இலையை மென்றுக் கொண்டே பாம்புப் புற்றுக்குள் கை விடும் காட்டுமிராண்டிகள் அவர்கள். காடுகளில் இலந்தை.. அத்தி.. நாகப்பழ மரங்கள் நிறைந்திருந்தது மட்டுமே ஆறுதலாக இருக்கும். நாட்போக்கில் தாத்தாவின் மொழிகளனைத்தும் காடுகளால் நிரம்பி வழிந்துக் கொண்டே வந்ததில் ஏதோ நிரம்பிக் கொண்டேயிருந்தது.
“நான் வர்றப்ப நம்ப வீடு இருக்கற எடமெல்லாம் ஒரே காடாதாய்யா இருந்துச்சு.. எங்கூட்டாளியோட அப்பா காட்ட வாங்கித் திருத்திக்கிட்டுருந்த நேரம் நான் வந்து சேர்ந்தேன்.. படிப்பு ஏறாம கெடந்த மவனுக்கு சோடியா என்னையும் காவலுக்கு அனுப்பி வுட்டாரு.. நாள்பூரா நானும் அவனும் இங்ஙனதான் சுத்திக்கிட்டுக் கெடப்போம்.. வெலக்கு வாங்குன எடத்த உசிர்வேலி போட்டு பராமரிக்கறதுதான் எங்க பொழப்பு.. பொழுதண்டும்போதுதான் வீட்டுக்குப் போவோம்..”
”வீடுன்னா.. அது எங்க இருந்துச்சு..?”
”அதாய்யா.. எங்கூட்டாளியோட வீடுதான்.. இங்கேர்ந்து நாப்பது கிலோ மீட்டர் தொலவுன்னாலும் இருக்கும்.. பொடிநடையா நடந்து பஸ்சு போற எடத்துக்கு வந்துட்டமுன்னா ரவைக்கு வீடு போய் சேந்துடுவோம்..”
”உனக்கு பயம்மா இருக்காதா தாத்தா..” என்பேன்.
”எல்லாம் மொதல்ல அப்டிதாய்யா இருக்கும்.. பேசாம ஊருக்கே ஓடிடுலாமின்னு தோணுச்சு.. ராவெல்லாம் படுத்து அளுவேன்.. துாங்குனாலும் காட்டுக்குள்ள கெடக்கறமாதிரியே கனாவெல்லாம் வந்து பயமுறுத்தும்.. இங்க கெடைக்கிற மூணுவேளச் சோறு எங்க வீட்ல கெடைக்காது.. வேணாம்னு ஒதறிட்டு வந்துட்டு திரும்ப வீட்டோட போயி ஒட்டிக்கிக்க கூடாதுன்னு வீம்பு ஒரு பக்கம்.. எல்லாஞ்சேந்து இங்ஙனயே தங்கிக்கிட்டேன். ஆச்சு வருசம் ஒண்ணு.. காட்டை திருத்தி பட்டாவும் போட்டாச்சு..”
”அப்றம் ஏன் போகல..?” பத்து வயது ஞானத்தில் இவ்வளவுதான் கேட்க முடிந்தது எனக்கு.
”வுட்டா தானேய்யா போறதுக்கு..?” என்றார் கண்கள் பளபளக்க.
”யாரு தாத்தா ஒன்னை புடிச்சு வச்சுக்கிட்டா..?” எனக்கும் கண்கள் பளபளக்கத் தொடங்கிய நேரம் அது.
”காடுதாய்யா.. காடுதான் என்ன போவ வுடல.. இங்ஙனயே கெடந்தேன்.. இந்தப் பக்கத்துப் பொண்ணப் பாத்துக் கட்டி வச்சாங்க.. என் ஒழைப்புக்கு கூலியாக ஒதுக்கி வுட்ட எடத்துலதான் உங்கப்பன் இந்த வூட்டக் கட்டுனான்..” பருவ வயது எட்டியிருந்த எனக்கு காட்டின் மீது காதல் வேர்விடத் தொடங்கியிருந்தது.
கீழேயிருந்து மீண்டும் அழைப்பு. எழுந்துச் செல்ல மனமில்லை. காட்டிலிருந்து கிளம்பும்போது கூட இப்படிதான் இருக்கும். இறைக்க இறைக்க சுரந்துக் கொண்டிருப்பது நீர் மட்டுமல்ல.. காடும்தான். எங்கும் எதிலும் அது முடிவதேயில்லை. வழி மாறிப் போகும் நாட்களில் கூட பயமோ.. பதட்டமோ ஏற்படுவதில்லை எங்கள் இருவருக்குமே. கவிழ்ந்த மேகம் சில்லென்ற காற்றாய் உடலை ஏந்திக் கொள்ள ஏகாந்த அமைதிக்குள் மனம் உறைந்துப் போகும். விருப்புவெறுப்பற்ற மனவெளி பாம்பாய் ஊர்ந்து அகத்தினுள் படிந்துப் போகும். தாத்தாவின் கைப்பிடியை இறுக்கிக் கொள்ள தேவைகள் குறைந்துக் கொண்டே வந்தன. மழை கிளப்பி விடும் காட்டின் வாசனை உள்ளே போதையாய் இறங்கத் தொடங்கும். மரங்களில் வழியும் மழை, தண்டுகளை ஈரமாக்கி.. இலைத்துளிர்களை நீவி விட்டு.. பழுத்த இலைகளை கீழே உதிர்த்து மாயஜாலம் நிகழ்த்தும். மதர்த்த பெரிய இலைகள் மழை நீரை உள்வாங்கியும் பின் வழிந்தோடவும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். இரவா.. பகலாவென கணிக்கவியலாத வெளிச்சம் கவிழ்ந்து காட்டை நிரப்புவதில் சலனங்களற்ற புது வெளிக்குள் புகுந்துக் கொள்ளும் மனம் அமைதியின் ஆர்ப்பரிப்பிற்குள் இறுத்திக் கொள்ள எத்தனிக்கும். இனம் புரியாத சிறுச் சிறு பறவைகளின் ஒலிகள் சூழலின் ரம்மியத்தைக் கூட்டும். கால்களில் ஒட்டிக் கொண்டச் சேறு உயிர் கரைந்து ஓடுவதுப் போல மழை நீரில் தன் பிடிமானத்தை இழந்து வழிந்தோடும்.
மழையின் தீண்டலில் கிறங்கிக் கிடக்கும் மரங்களில் சில தான் பெற்ற இன்பத்தை பிறருக்கும் கடத்தி விடும் நன்நோக்கில் பின்னிக் கிடந்த வேர்களை நிலத்திற்கு வெளியே பின்னிப் பிணைத்திருக்கும். சூல் கொண்ட வரையாடுகள் சிலிர்த்துக் கொள்ள.. செந்நிற மொந்தை வால் அணில்கள் கிளைகளில் தாவிச் செல்ல இதமான மழை இசையாக அகத்தை நிரப்பி விடும். அதிரடிக்காத காட்டு மழை உடலுக்குப் பழகிப் போனதில் சளி.. ஜுரம் என தொடர் அத்யாயங்கள் நிகழ்வதில்லை என்பதால் காட்டு வாழ்க்கைக்குத் தடை ஏற்படுவதில்லை. பள்ளி விடுமுறைத் தினங்கள் குதுாகலமாகிப் போயின.
இரண்டு மலைத் தொடருக்கு இடையே அமைந்துள்ளப் பள்ளத்தாக்குப் பகுதிதான் எங்கள் ஊர். இயற்கையின் இறகுகளுக்குள் பதவிசாக பம்மிக் கிடப்பது போலிருக்கும் வான்பார்வைக்கு. மலையில் உருவாகி வழிந்தோடும் சாரல் தெளிப்பிற்குள் அமிழ்ந்து நின்று அழகுக் காட்டும் ஊர்களாக சூழ்ந்துக் கிடந்தாலும், சுற்றுலாத்தலமாக புகழடையாத பாக்கியத்தில் பொலிவு விலகாத பவித்திர அழகைப் பொத்தி வைக்க ஏதுவாயிருந்தது. நெல் வயல்களும் வாழை மரங்களும் தென்னந்தோப்புகளும் கரும்பங்கொல்லைகளும் கிராமங்களை சோலைகளாக்கியிருந்தன. காடுகளைப் போலச் சரணாலயங்களும் நகர்ந்துக் கொண்டதில் கிராமங்களுக்கும் விலங்குகளுக்குமான இடைவெளி அறுபது கிலோ மீட்டர் என்றது.
என் மனைவி மேலேறி வந்து விட்டாள். “வீடே அடைஞ்சுப் போயி புழுக்கமா கெடக்குது.. கொழந்தை அழுதுக்கிட்டே இருந்துட்டு இப்பதான் துாங்குனா.. சத்தம் போடாம மேல வந்தேன்..“ மலைச்சாரல் காற்று புதிதாக பிறந்தக் குழந்தையை கூட அரவணைத்துப் பழக்கியிருந்தது. கதவையடைத்து காற்றை வழியனுப்பியதில் வந்தப் பாதிப்பு இது.. சிரித்துக் கொண்டேன்.
”எல்லாரும் உயிரக் கையில புடிச்சுக்கிட்டு கெடக்குறோம்.. உங்களுக்கு எதுக்கெடுத்தாலும் சிரிப்புதான்..” என் சிரிப்பு அவளை கோபப்படுத்தியது. சென்ற வாரம் இதே நாளில்தான் சிறுத்தைப்புலியொன்று எங்கள் ஊருக்கு விஜயம் செய்திருந்தது. வனத்துறைக்கும் காவல் துறைக்கும் தகவல் பறக்க ஊர் மொத்தமும் ஜீப்புகளாலும் சீருடைகளாலும் நிறைந்துப் போனது. பதறிப்போன சுற்றுபற்று கிராமங்கள் மொத்தமும் உள்ளுக்குள் முடங்கிப் போனது. தேவைகளிருந்தும் வாங்குவோரின்றி கடைகளும் பள்ளிகளும் மூடப்பட ஊர் முழுமையும் பாதுகாப்பு வளையம் அணிந்துக் கொண்டதில் ஊரே அந்நியமாகிப் போனது அனைவருக்கும்.
அதற்கு அடுத்தநாள் என் மனைவியின் தங்கைக்கு என் வீட்டில் வைத்து வளைக்காப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். ”தாயில்லாதப் புள்ள.. கூடப் பொறந்தவளுக்கு நான் செய்யாம யாரு செய்வா..” என்று இழுத்துப் போட்டுக் கொண்டு சொந்தங்களை அழைத்திருந்த என் மனைவி சிறுத்தைப்புலியின் வரவிலும் யாரும் வெளியே வர வேண்டாம் என்ற வனத்துறையின் அறிவிப்பிலும் உடைந்துப் போனாள். சமீபத்தில்தான் ஒரு குழந்தைக்குத் தாயாகியிருந்த அவளுக்கு பிரசவ நேரத்தில் தாயின் தேவையை அதிகமாக உணரமுடிந்ததில் தங்கையின் பிரசவத்திற்கு தானே பொறுப்பேற்க முடிவு செய்த நிலையில்தான் இந்த களேபரம். மக்கள் வீடடங்கிக் கிடந்தாலும் தகவல் தொழில்நுட்பத்தின் நவீனங்கள் வதந்திகளையும் புரளிகளையும் பரப்பும் விரைவுச் சாதனமாகின்றன. சிறுத்தைப்புலி தண்ணீர் டேங்கின் மீது நின்றுக் கொண்டிருக்கிறது.. வீட்டுக் கதவை தட்டியது என்றல்லாம் வதந்திகள் சூடாகிக் கிடந்தாலும் அது அகப்படும் வழி மட்டும் தெரியவில்லை. அதன் செழுமையானக் காலடித் தடங்களைப் பரிசோதனைக்கு அனுப்பியதில் வனத்துறையினரால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட விலங்குதான் என்றும் இது சற்றே மூர்க்கம் கூடியது என்றும் தெரிந்துக் கொண்டதில் ஊர் இன்னுமாக உறைந்தது. “சனியன்.. மொதல்ல கூண்டுக்குள்ள சிக்குட்டும்.. பிற்பாடு கலெக்டருக்கிட்ட போயி மனு கொடுப்போம்..” என்று குறுந்தகவல்கள் பரிமாறப்பட்டன. “மனுவெல்லாம் தர்மமில்ல.. போராட்டந்தான் சரியான வழி..” என்றது அடுத்து வந்தத் தகவல். “யாரை நம்பியும் உசிர ஒப்படைக்க முடியாது.. பேசாம நாம்பளே சுட்டுத் தள்ளிட வேண்டியதுதான்..” துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருந்தவரிடமிருந்து வீரமான தகவல் வெளியானது. எது எப்படியிருந்தாலும் வீரமெல்லாம் வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டாக வேண்டியக் கட்டாயத்தில் நான்கு நாட்கள் கடந்து விட்டன.
சில சமயங்களில் கதாநாயகனாகும் ஆசையில் பள்ளித் தோழர்களிடம் தாத்தாவின் அனுபவங்களை என் அனுபவங்களாக எடுத்து விடுவேன். “நான் பெரிய யானையப் பார்த்தேன்.. கோவில்ல இல்ல.. காட்டுல..” வாயடைத்துப் போயினர் நண்பர்கள். ”காட்டுலயா..?” என்றனர். ”ஒரு தடவை ஃபாரஸ்ட்காரங்க காட்டுக்கு போக வழிக் கேட்டாங்க.. நானும் ஜீப்ல வாரேன்னு சொல்லி ஏறிக்கிட்டேன். போற வழியில இன்னொரு காட்டுவாசி ஆளையும் ஏத்திக்கிட்டாங்க. மலைப்பாதையில ஜீப்பு போயீட்டு இருந்துச்சா.. அப்ப திடீர்ன்னு ஆறேழு யானைங்க.. பெருசுலேர்ந்து குட்டி வரைக்கும் நிக்குதுங்க.. அதுல ஒரு யானை ரொம்பப் பெருசு.. அது சண்டை போடுறாப்புல வேகமா ஜீப்ப நோக்கி வந்துச்சு.. ஆபிசருங்கள்ளாம் பயந்துட்டாங்க.. யாரும் பயப்புடாதீங்க.. நான் பாத்துக்கிறேன்னாரு சாடை செஞ்சாரு அந்த காட்டுவாசி ஆள். அதுக்குள்ள அந்த பெரிய யானை ஜீப்புக்கிட்டே வந்துடுச்சு.. என்னா செய்யறதுன்னே எங்களுக்கு புரியல. காத்துல தும்பிக்கை ஒரு வீசு வீசுச்சுப் பாரு.. குலை நடுங்கிப் போச்சு எல்லாத்துக்கும்.. திரும்பவும் நான் பாத்துக்கிறேன்னு சாடை செஞ்சுட்டு வண்டியிலேர்ந்து இறங்கினாரு அந்த ஆளு..“
எல்லாருடையக் கண்களும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. ”எலந்தவடை வாங்கியாந்தாதான் சொல்லுவேன்..“ நான் அடம் பிடிக்க நாலைந்து இலந்தை வடைகள் என் கைக்கு வந்தன. நிறைய உப்பும் காரமும் இலந்தைப்பழ புளிப்புமாக நான் விடும் கதையைப் போல சரிவிகித மசாலா கலந்த வடைகள். காட்டுக்குள் பொறுக்கும் இலந்தைப்பழங்களை வெளியூர் விற்பனைக்கு அனுப்பியதுப் போக மீதமுள்ளவற்றை இடித்து வடைகளாக தட்டி விற்பனைச் செய்வார்கள்.
”அப்றம்…” ஆவலாகியதுக் கூட்டம். ஆனால் தாத்தா என்னை இதுபோல காத்திருக்க விட்டதில்லை. ”அவவன் வேலய அவவனைச் செய்ய வுட்டுடுணும்.. வெள்ளாமைச் செய்யறவன் பிளேன் ஓட்டுறதுக்கணக்கா எல்லா பயலுங்களுக்கும் காடு புரிஞ்சுப் போவுமா… மொத்த ஆளுங்களும் நடுங்கிப் போயிட்டாங்க. ஆனா அந்த காட்டுவாசி ஆளு கலங்கல.. யானை எச்சரிக்கை பண்றதுக்குதான் இப்டி தும்பிக்கைய வீசுதுன்னு சாடைக் காட்டிட்டு கண்ணாடிப் பாட்டில்ல சின்னக் கல்லு வச்சு வொரசினாரு.. பொறவு என்னென்னமோ வினோத சத்தமெல்லாம் எழுப்பிக்கிட்டே அந்த யானைக்கூட்டத்துக்கிட்ட போனாரு.. பயமே இல்ல அவர் முகத்துல.. நேரா போய் அங்கன இருக்கற கல்லு ஒண்ணுல உக்காந்துக்கிட்டு அந்த யானைகளையே பார்த்துக்கிட்டு இருந்தாரு.. அம்புட்டு யானைங்களும் செத்த நேரத்துல காட்டுக்குள்ளே போயிடுச்சு…” இதை கேட்டு முடிப்பதற்குள் என் உள்ளங்கை வியர்த்திருந்ததை உணர்ந்தவர்போல வழியிலிருந்த செடியை கசக்கி முகர்ந்தார். என் மூக்கிலும் வைத்தார். “பாம்பு அண்டாது.. வாய்யா..“ என்றார்.
காடு நீண்டிருந்தது. ஒருநாள் தாத்தா என்னை வெகுத் தொலைவிற்கு அழைத்துச் சென்றார். ஒற்றையடிப்பாதை அது. வெவ்வேறு அளவுகளிலான நிலப்பரப்பு என்பதால் பாதையின் நீளம் தெரியவி்ல்லை. நடந்து நடந்து அளந்தாலும் கால்களின் சோர்வு மனத்திற்கு எட்டவில்லை. இரண்டுப் பக்கமும் உயர்ந்துக் கொண்டேப் போகும் மலைகள் காட்டுப்புதர்களாலும் விதவிதமான செடிகளாலும் நிறைந்துக் கிடந்தது. வீசும் காற்று ஏதோ ஒருவித நறுமணத்தை தன்னுள் புதைத்திருந்தது. ஒற்றையடிப்பாதை புதர்களின் அடர்வில் துண்டாகிப் போக புதுப்பாதையொன்று பிரிந்துச் சென்றது. திடிரென்று காற்று பூந்துாவலைகளாக மாற “பக்கத்துல அருவி இருக்கு..” என்றார் தாத்தா.
தாத்தாவின் கணிப்புப்படி சற்றே தள்ளி பாறை நுரைத்து மெல்லிய கோடாக வழிவதுப் போல அருவிக் கொட்டிக் கொண்டிருந்தது. தொட்டுப் பார்க்கத் துாண்டும் ஆவல் உடல் முழுவதும் வியாபிக்க தாத்தாவிடம் வெளிப்படுத்தினேன். பாதையற்ற பாதையில் புதர்களை விலக்கி நடந்தோம். உடுத்தியிருந்த முரட்டுக் கம்பளியையும் மீறி தோலை உரசிச் சென்றது முற்செடிகள். பிறவிப்பயனை அடையப் போவதுப் போன்றதொரு தெறிப்புடன் முன்னேறிய தாத்தாவுக்கு இது ஏதும் பொருட்டில்லை. நானும் பின்தொடர்ந்தேன். பாசியேறி அடர்ப்பச்சை நிறத்திலிருந்தது பாறை. நீர்க்கரைகளை சுமந்த உலர்ந்தப் பாறைகள் கூட வழுவழுவென்றிருந்தன. அதில் ஆங்காங்கே நெட்டுக்குத்தாக முளைத்திருந்த செடிகள் உயிரோட்டமற்றிருந்தன. நீர் வழிய இடம் கொடுத்தப் பாறைகள் சற்றே உள்வாங்கியும் கருத்தப் பாறைகள் புடைத்துமாக சீரற்று இருந்தன. வீசிப் போகும் காற்று, வழியும் நீரைத் தொட்டு உடலில் துாவி விளையாடியது. மிக மெல்லிய நீர்தான் என்றாலும் நீரில் வேகமிருந்தது. மென்சாரல் உடலெங்கும் நனைக்க சில்லிப்பாக வழிந்தோடிய நீர் கைகளின் வழியே உள்ளுக்குள் சிலிர்ப்பாக இறங்க.. நிஜமான சொர்க்கம் இதுதானோ எனத் தோன்றியது.
பெரிய அருவியொன்றின் கசிவாகயிருக்கும் என்றார் தாத்தா. கீழேச் செல்ல செல்ல நீரின் அகலம் மேலும் குறைந்து வெண்பட்டு வேட்டியின் கரையாக மாறி கண்களுக்கு எட்டும் தொலைவில் அதிக நீரற்றப் பள்ளத்தில் விழுந்தது. பெரிய ஓடையின் பள்ளம் அது. நீரின் தடங்கள் பதிந்தும் பதியாமலுமாக வறண்டிருந்தது. சிறுக் குட்டையாக தேங்கியிருந்த நீர் அருவி வழிந்து விழும் இடத்தைத் தவிர்த்து மீதமிடத்தில் அசைவற்றிருந்தது. சுற்றிலுமான பெருமரங்கள் இவ்வோடையை நம்பி பிழைப்பனவாகவும் நீரற்றுப் போனதில் சற்றே வாட்டமுற்றதுப் போலவும் தோன்றியது. கட்டாறுகள் எல்லா நேரமும் ஒன்றுப் போலிருப்பதில்லை. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றார் தாத்தா.
இத்தனை அழகுகளையும் வஞ்சனையோடு தனக்குள் மட்டும் பொதித்து வைத்திருக்கும் காட்டின் மீது கோபம் கூட வந்தது. மெதுவாக நடந்ததில் துாரத்து மரங்கள் நெருங்கி கைத்தொடும் அருகாமைக்கு வந்திருந்தன. அதன் அடர்வுகள் தலைக்கு மேல் குடை விரித்ததுப் போல் நிழல் பரப்பியிருந்ததில் சூரியனுக்கும் எங்களுக்குமான தொடர்புகளற்று போயிருந்தது அந்த நண்பகல் பொழுதில். சற்றுத் தொலைவில் குடிசைகளின் தலைப்பாகங்கள் தெரிய அதை நோக்கி நடந்தோம். நகரத்தின் எந்த சாயல்களுக்குள் தன்னை ஒப்புக் கொடுக்காத வீடுகளும் மனிதர்களுமாக நிரம்பியிருந்தது அந்த மிகச் சிறிய ஊர். தாமரையிலைப் போன்ற பெரிய இலையில் மலை வாழைப்பழமும் கருப்பட்டியும் வைத்து பரிமாறினார்கள். தேனில் துவைத்தெடுத்த வேர்ப்பலாவும் நறுக்கிய சிறிய வெங்காயம் சீராகத் துாவப்பட்ட ராகி ரொட்டியும் சுவையாக இருந்தன. தொலைந்துப் போன கலோரிகளை மீண்டும் ஏற்றிக் கொண்ட தென்பில் எங்களின் நடைத் துள்ளாட்டமானது.
ஆணும் பெண்ணுமாக மயில்கள் இரண்டு சற்றும் எதிர்பாராதத் தருணத்தில் பக்கவாட்டில் கடந்தன. மனத்தில் வந்துப் போன உணர்வு கிளர்ச்சியா..





«Час будет пандемическим. Я не могу лечь .. Я не могу ложиться. Боюсь.
Она села у меня на колени и села ко мне. Я был так привязан к ней, что не мог отплатить ей за любовь. 


